புதுச்சேரி: “கரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. முககவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளது” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன் குமார் (பாஜக), எதிர்கட்சித்தலைவர் சிவா, பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், கேஎஸ்பி.ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: “கரோனா பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. முககவசம் அணிய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துகளும் போதிய அளவில் உள்ளது. மத்திய அரசின் அனைத்து வழிகாட்டுலும் பின்பற்றப்படுகின்றன,” என்றார்.
கரோனா நோய் தொற்று அதிகரிப்பு மற்றும் வெயில் அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்து வருவது குறித்த கேள்விக்கு, “இப்போது தான் பள்ளிகளை தொடங்கி உள்ளோம்” என்றார். 2026ம் ஆண்டு தேர்தலுக்கு என்.ஆர்.காங்கிரஸ் தயாராக உள்ளதா? என கேள்விக்கு, “தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்” என்றார். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் நீடிக்குமா? அணி மாறுமா? என்ற கேள்விக்கு, முதல்வர் ரங்கசாமி பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.