பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்து சகோதரிகளான பள்ளிச் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்தனர்.
பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீனின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9). சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யது அஸ்பியா பானு 9-ம் வகுப்பும், அரியகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சபிக்கா பானு 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் சகோதரிகள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள வேப்பரத்தின் அடியில் வேப்பங்கொட்டை சேகரித்துக் கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த சகோதரிகள் இருவர் மீதும் மின்னல் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீஸார் 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மின்னல் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், வாழவந்தாள்புரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.