சென்னை: பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கான திட்ட அனுமதிக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் டிட்கோவால் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தலைமைச் செலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு கட்டுமானப் பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.