காஞ்சிபுரம்: ஏகனாபுரத்தை மையமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து நேற்று வளத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகானாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. விவசாய நிலங்கள், வீடுகள், மனைகள், ஏரி, குளங்கள் என பல்வேறு வகையான நிலங்கள் இந்த விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் எடுத்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய விமான நிலைய திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தி பத்திரப் பதிவு செய்து, நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் முயற்சியை விமான நிலைய திட்ட அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதுவரை 19 பேரிடம் இருந்து நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. நிலங்கள் வாங்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது.
தங்கள் கோரிக்கைக்கு மதிப்பில்லை என்று கூறி ஏகனாபுரம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சட்டப்போராட்டம் நடத்துவதற்கான நடவடிக்கைகளிலும் போராட்டக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விரிவடையும் போராட்டம்: பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு, ஏகனாபுரத்தில் நடத்தி வரும் போராட்டம் 1,095-வது நாளை எட்டியுள்ள நிலையில் வளத்தோட்டம் மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் விமான நிலையத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஏகனாபுரம் மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இது குறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் கூறும்போது, “இந்த நிலத்தை நம்பிதான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது. நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். உயிரை கொடுத்தாவது எங்கள் இடத்தை பாதுகாப்போம்” என்றனர். இந்தப் போராட்டம் காரணமாக காஞ்சிபுரம், பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பதற்றம் நிலவியது.