சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 13-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் விவரம்: ”பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தவும், பணம் மதீப்பீடு தொடர்பாகவும் ஆணை வெளியிடப்படுகிறது.
இதுபோன்ற எந்த பூச்சாண்டிகளுக்கும் பரந்தூர் மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், வெளியூரில் இருந்து பரந்தூர் பகுதியில் நிலங்களை முதலீடு செய்தவர்களை அழைத்து வந்து அவர்களது நிலங்கள் பத்திரப் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் பரந்தூர் மக்கள் தங்கள் நிலங்களை கொடுக்க முன் வந்துவிட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இதனை பரந்தூர் விவாசாயிகள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஜனநாயக படுகொலை செய்யும் தமிழக அரசையும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரையும் கண்டித்து வரும் ஜூலை 13ம் தேதி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதில் பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கின்றனர்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.