காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் புதிய பசுமை வெளி விமான நிலையத் திட்டத்துக்கான நிலம் எடுக்கும் பணி இன்று (ஜூலை 9) தொடங்கியது. முதல் கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் ஒப்புதலுடன் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்க கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டது. இந்த நிலையில், இந்த புதிய பசுமை வெளி விமான நிலையத் திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்க ளிடம் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதன் அடிப்படையில் நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாக ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர் மற்றும் அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேரிடம் மாவட்ட ஆட்சியர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் அவர்கள் தங்களது 17.52 ஏக்கர் நிலத்தை எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரூ.9.22 கோடி மதிப்பு கொண்ட நிலத்தை நில உரிமைதாரர்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு பதிவு செய்து கொடுத்தனர்.
இந்த நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக (ஒரு நாளுக்குள்) அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக் குழு கண்டனம்: இந்த நடவடிக்கைக்கு பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ள து. இது தொடர்பாக இந்தக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும் மாநில அரசு திட்டத்தை கைவிட வேண்டி கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய மக்களிடம் எந்த விதமான கலந்தாய்வு கூட்டங்களையும் நடத்தாமல், முறையான ஆய்வுகள் எதையும் நடத்தாமல், விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டுக்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழக அரசு இதுபோன்ற எந்த விதமான பூச்சாண்டி காட்டினாலும் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள்.
இதை நன்கு உணர்ந்த மாவட்ட நிர்வாகம் இன்று பரந்தூர் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் நபர்களை மாவட்ட நிர்வாகம் வாகன மற்றும் உணவு ஏற்பாடு செய்து அழைத்து வந்து அவங்களுடைய நிலங்களை பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்துக்காக பரந்துர் பகுதி விவசாய மக்கள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சிப்பதை பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
விவசாயிகளை ஜனநாயக படுகொலை செய்யும் தமிழக அரசுக்கு போராட்ட குழுவின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையோடு மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும். விவசாய பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நம்முடைய சட்ட போராட்டத்திற்கான முன்னெடுப்பு பணி ஒரு சில நாட்களில் தொடங்கும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.