திருப்பூர்: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகள் சோளம், கத்தரி, நெல் உள்ளிட்ட பயிருடன் வந்து இன்று (ஜூன் 9) அளித்த மனுவின் விவரம்: கடந்த மே 26-ம் தேதி தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர், விவசாயி கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு, விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர்க்கடன்கள் வழங்கப்படும். ஆனால் அந்த பயிர்க் கடன்கள் 2 மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.76 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு செலவாகிறது. ஆனால் ரூ. 36 ஆயிரம் மட்டுமே பயிர்க்கடன் வழங்குகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிக்க, விவசாயிகள் தேசியமயமாக்கபப்ட்ட வங்கிகளில் பயிர்க் கடன் பெற வேண்டிய சூழ்நிலை எழுகிறது.
விவசாயிகள் மூலதனக் கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்களுக்கும், கல்வி,கடன், நகை கடன் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று, விவசாயத்தில் உரிய வருமானம் இல்லாததால், செலுத்த முடியாமல் சிபில் ரிப்போர்ட் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். இனி கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களுக்கும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவு செய்யப்படும் என்பது, விவசாயிகள் பயிர்க் கடன் பெறமுடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கபப்ட்ட வங்கிகளின் சிபில் ரிப்போர்ட்டிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் கோரி வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்பது, பின்னடைவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கூட்டுறவுத் துறையின் இந்த நடவடிக்கை விவசாயிகளிடையே தமிழ்நாடு அரசின் மீது மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்சினை மகாராஷ்டிராவில் எழும்போது, அனைத்து வங்கிகளும் சிபில் ரிப்போர்ட்டை வைத்து நிராகரிப்பது தவறு என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மாநில அரசின் கூட்டுறவுத் துறையை சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.