சென்னை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற சிபில் ரிப்போர்ட் பார்க்கும் முறையை ரத்து செய்யக் கோரி சென்னையில் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கும் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உட்பட 25 விவசாய சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் ஒரு நாள் கவன ஈர்ப்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “விவசாயிகள் இனி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன், கால்நடை கடன் உள்ளிட்ட கடனுதவியை பெற வேண்டும் என்றால், சிபில் ரிப்போர்ட்டை பார்த்து தான் கடன் வழங்கப்படும் என தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. அதேபோல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ அல்லது இதர வங்கிகளிலோ பயிர்க்கடன் பெற்றிருந்தால் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கப்படாது எனவும் அறிவித்திருக்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்கள் என்பது விவசாயிகளுக்கானது. விவசாயிகளால் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதோடு, விவசாயிகளே வரக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால், தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆகும் உற்பத்தி செலவில் சராசரியாக 50 சதவீதம் மட்டுமே கூட்டுறவு சங்கத்தால் பயிர்க் கடனாக வழங்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூ.76 ஆயிரம் தேவைப்படும் நிலையில், ரூ.36 ஆயிரம் மட்டுமே கடனாக கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படுகிறது. இதனால் இன்னொரு பகுதி கடனுக்காக வேறு வங்கிகளை அணுக வேண்டிய தேவை இருக்கிறது.
இந்தச் சூழலை புரிந்து கொள்ளாமல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற்றிருந்தால், கூட்டுறவு சங்கங்களிலே பயிர்க் கடன் பெற முடியாது என்பதும், அதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கும் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அதிகளவில் விவசாய சங்கங்களை திரட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில அளவிலும் தொடர்ச்சி யான போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று ஈசன் முருகசாமி கூறினார்.