மதுரை: நெல்லை- மதுரை, மதுரை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர்களை பயணிகள் சிறுநீர் கழிப்பதற்காக உரிய இடத்தில் பத்து நிமிடம் நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து நெல்லைக்கும் தினமும் பைபாஸ் ரைடர் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை- மதுரை மூன்றரை மணி நேர பயண தூரத்தின் போது பைபாஸ் ரைடர் பேருந்துகள் இடையில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை.
இதனால் பைபாஸ் ரைடரில் பயணிக்கும் பயணிகள் குறிப்பாக வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உரிய நேரத்தில் சிறுநீர் கழிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இது தொடரும் போது பயணிகள் சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். சிறுநீர் கழிக்க பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொண்டாலும் ஓட்டுநர்கள் நிறுத்துவதில்லை.
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் தவிர்த்து வேறு எங்கும் கழிப்பறைகள் கிடையாது. தனியார் ஓட்டல்களில் கழிப்பறைகள் இருந்தாலும், அதை பயன்படுத்த ஓட்டல் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பேருந்துகளில் பயணம் செய்வோர்களுக்காக சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறை மற்றும் சிறுநீர் பிறைகளை ஏற்படுத்த வேண்டிய மாநில அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கடமையாகும்.
இதனால் நெல்லை- மதுரை, மதுரை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர்களை பயணிகள் சிறுநீர் கழிப்பதற்காக உரிய இடத்தில் பத்து நிமிடம் நிறுத்த உத்தரவிடக்கோரி எங்கள் சங்கம் சார்பில் 29.5.2025-ல் போக்குவரத்து கழகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பப்பட்டது.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் சங்கத்தின் மனு அடிப்படையில் நெல்லை- மதுரை, மதுரை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர்களை பயணத்தின் இடையே பயணிகளுக்கு வசதியாக பத்து நிமிடம் நிறுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அரசு துறைகளின் நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அரசு துறைகள் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அதற்கான சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நடைபெற வேண்டும்.
இந்த மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை நீதித்துறை மறுஆய்வு அதிகாரங்களைப் பயன்படுத்தி வழங்க முடியாது. அப்படி செய்தால் அது போக்குவரத்துத் துறையின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு சமமாகும். இது சரியல்ல. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.