சென்னை: பயணிகளின் தேவை அடிப்படையில், தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.
இதை பரிசீலித்து, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 33 ரயில்களுக்கு 42 கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது,
அதன்விவரம்: சென்னை சென்ட்ரல் – கர்நாடக மாநிலம் ஷிமோகாடவுண் – சென்னை இடையே இயக்கப்படும் ரயில் (12691-12692) ஆம்பூரில் 2 நிமிடம் நின்று செல்லும். இது, ஆக.22-ம் தேதி முதல் அமலுக்கு வரும். தன்பாத் – ஆலப்புழா ரயில் (13351) குடியாத்தம், வாணியம்பாடியில் ஆக.18-ம் தேதி முதல் தலா 2 நிமிடம் நின்று செல்லும்.
அரக்கோணம் – சேலத்துக்கு இயக்கப்படும் மெமு ரயில் (16080) வளத்தூர் நிலையம், மேல்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சேலம் – அரக்கோணத்துக்கு இயக்கப்படும் மெமு ரயில் (16087) மேல்பட்டியில் நின்றுசெல்லும். இந்த நிறுத்தம் ஆக.18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திருச்சி – பாலக்காடு இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (16843-16844) இருகூர் நிலையத்தில் ஆக.18-ம் தேதி முதல் நின்று செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.