சென்னை: பனை மரத்தை வெட்டும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட அரசாணை விவரம்: சட்டப்பேரவையில் கடந்த 2022-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தாக்கல் செய்யும்போது, ‘‘பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தும் செயலைத் தடுக்கவும் அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்டுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்படும்” என அறிவித்தார்.
தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணையில், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது உதவி மாவட்ட ஆட்சியர், சார் மாவட்ட ஆட்சியர், வேளாண் உதவி இயக்குநர், காதி கிராமத் தொழில் வாரிய உதவிஇயக்குநர் ஆகியோருடன் கூடிய குழு அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியர் வேறு உறுப்பினரையும் தேவைக்கேற்ப குழுவில் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தோட்டக்கலைத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியரிடம் மரம் வெட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு வழி்காட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கான கருத்துருவை அரசுக்கு சமர்ப்பித்தார். அதில், தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கதர்த்துறை எடுத்த கணக்கின்படி, 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை வாழ்வாதாரமாக கொண்டு 3 லட்சம் விவசாய, தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. பனைப்பொருட்கள் ஏற்றுமதி மூலம் பனைத் தொழில் அந்நியசெலாவணி வருவாய்க்கு பங்களிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனை மரங்கள் குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டு பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 3 ஆண்டுகளாக பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
பனைமரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பனைமரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழு, வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைத்துள்ளது. இக்குழுக்கள் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனை மரம் தவிர்க்க முடியாத சூழலில் வெட்ட நேரிட்டால், மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி அவசியம். பனை மரம் வெட்ட அனுமதி வேண்டி தனிநபர், பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண் துறையின் உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஆய்வு செய்து பனைமரத்தை வெட்ட வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும். பனைமரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்க, ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான குழு, மரத்தை வெட்டுவதற்கான முடிவை ஒரு மாதத்துக்குள் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. மனுதாரரும் அனுமதி பெற்ற பின்னரே வெட்ட வேண்டும். வெட்டும் போது ஆய்வு செய்ய குழு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். வெட்டப்பட்ட மரத்தின் பாகங்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லும் போது தோட்டக்கலை இயக்குநர் அனுமதிக் கடிதத்தை காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.