சென்னை: பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறைதான் மிகவும் அவசிய தேவை என்று ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நடைபெற்ற இதழியல் பயிற்சி பயிலரங்கில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.சாய்நாத் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையம், சென்னை சமூக பணி கல்லூரி, ஆசிய ஊடகவியல் கல்லூரி சார்பில் பத்திரிகை மற்றும் சமூகத் தொடர்பு குறித்து இதழியல் மாணவ-மாணவிகளுக்கு 2 வாரம் காலம் பயிற்சி பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இப்பயிலரங்கின் நிறைவு விழா சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் இந்திய ஊரக மக்கள் ஆவணம் அமைப்பின் நிறுவனரான மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் நிறைவுரை ஆற்றி பேசியதாவது: ஒருவர் சிறந்த பத்திரிகையாளராகத் திகழ வேண்டுமானால் அவருக்கு தொழில்நுட்பத்திறன், பேரார்வம், நம்பகத்தன்மை, பொதுமக்களை சமாதானப் படுத்தும் திறன் போன்ற பண்புகள் தேவை.
ஆனால். எல்லாவற்றுக் கும்மேலாக பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறைதான் மிகவும் அவசிய தேவை ஆகும். மொழியறிவு என்பது இரண்டாம்பட்சம்தான். மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. மாறாக பத்திரிகையாளரின் எழுத்துத்திறனை காண்பிக்கக்கூடிய தளம் அல்ல. சட்டத்தில் தீண்டாமையை ஒழித்துவிட்டோம். ஆனால் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் இன்னும் தீண்டாமை இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.
மதிய உணவு திட்டம் தமிழகத்தை தொடர்ந்து இந்தியாவின் இதர மாநிலங்களில் செயல்படுத்தப் பட்டபோது அவற்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ஒடிசா மாநிலத்தில் ஒரு பள்ளியில் சத்துணவு வழங்கும்போது குழந்தைகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மனவேதனை அடைந்தேன்.
இந்தியாவின் குடியரசு தலைவர்களாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக, மாநிலங்களில் ஆளுநர்களாக, முதல்வர்களாக தலித் வகுப்பினர் பணியாற்றி உள்ளனர்; பணியாற்றியும் வருகின்றனர். ஆனால், தேசிய அளவிலான ஊடக நிறுவனங்களில் தலித் சமூகத்தினர் முக்கிய பதவிகளில் எத்தனை பேர் உள்ளனர்? சமுதாயத்தில் சமூக சமத்துவமின்மை இன்னும் நிலவுகிறது.
இத்தகைய சூழலில் இளம் பத்திரிகையாளர்கள் புதிய சிந்தனையோடு சமுதாயத்தை பார்க்க வேண்டும். அவர்களின் இதயத்தில் சமூக அக்கறையும் கரிசனமும் தோன்றால் அது அவர்களின் சிந்தனையிலும் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சென்னை சமூக பணிகள் கல்லூரி முதல்வர் எஸ்.ராஜா சாமுவேல் வரவேற்றார். ஆசிய ஊடகவியல் கல்லூரியின் இணை டீன் மோகன் ராமமூர்த்தி பயிலரங்க அறிக்கை வாசித்தார். டீன் நளினி ராஜன் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சுசீந்திரா நன்றி கூறினார்.