சென்னை: பதவி உயர்வுக்கு தகுதியான 26 பேரின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கூறி, மின்வாரிய தலைமையகத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, அவர்கள் பணிபுரியும் வட்டத்தின் தலைமை அலுவலர், சம்பந்தப்பட்ட ஊழியரின் திறன் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவற்றுடன் பட்டியல் தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். அதனடிப்படையில், தேர்வு செய்யப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படும்.
மின்வாரிய விதி: மேலும், உயர் பதவியும், ஏற்கெனவே பணிபுரியும் அலுவலகம் அல்லது அதற்கு அருகில் உள்ள அலுவலகத்திலேயே வழங்கப்பட வேண்டும் என்பது வாரிய விதி. ஆனால், இதுபோன்ற விதிகளை பின்பற்றாமல் பதவி உயர்வு வழங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக, அண்மையில் கணக்கு மேற்பார்வையாளர் பதவியில் இருந்து உதவி கணக்கு அலுவலராக 96 பேர் அடங்கிய பட்டியல் உருவாக்கப்பட்டது. இதில், 93 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதிலும், பதவி உயர்வுக்கு தகுதியான 26 பேரின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவில்லை எனக் கூறி, மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில், சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, பணியமைப்பு பிரிவு தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள், வாரிய விதிப்படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை அழைத்து பேசிய தலைமைப் பொறியாளர் அம்பிகா, தற்போது வழங்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்தி வைப்பதுடன், பதவி உயர்வின்போது வாரிய விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.