திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் முடிந்தும் பணி நிரந்தரம் செய்யவில்லை என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வேதனையில் கொந்தளித்து வருகின்றன.
இந்த ஆட்சி காலம் பூர்த்தி அடைய இன்னும் 285 நாட்கள் தான் இருக்கின்றன. இதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி முறைகள் பிப்ரவரி மாதம் முதல் அமுலுக்கு வந்துவிட்டால் அதிலும் கிட்டத்தட்ட 90 நாட்கள் காபந்து அரசாகிவிடும். ஆகவே 200 நாட்கள்கூட முழுமையாக ஆட்சி செய்ய முடியாத சூழல் உள்ளது.
இதை முதல்வராக இருக்கின்ற ஸ்டாலின் புரிந்துகொண்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணி புரிந்தாலும் பணி நிரந்தரம் என திமுக ஒரு தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதன்படி பார்த்தால் 15 வது ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றார்கள்.
2016 சட்டமன்ற தேர்தலிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதியை கொடுத்து இருந்தது. 10 ஆண்டாக அதிமுக ஆட்சி செய்தபோது அப்போது திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. 5 ஆண்டாக இப்போது திமுக ஆட்சியில் இருக்கும்போது முன்பு அதிமுகவிடம் வைத்த கோரிக்கையை எப்போதோ நிறைவேற்றி இருக்க வேண்டும். திமுக முன்பு வலியுறுத்தி வந்த கோரிக்கையை இப்போது அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
முதல்வர் உள்பட அனைவருக்கும் லட்சக்கணக்கில் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்களாகிய நாங்கள் அனுப்பி ஓய்ந்து விட்டோம். பல கட்ட போராட்டங்களும் நடத்தி விட்டோம். ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பணி நிரந்தரம் குறித்து நேரிடையாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்துவது பெருமை சேர்க்காது. 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சியில் சம்பள உயர்வாக 2,500 ரூபாய் மட்டும்தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கின்ற 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு இந்த கால விலைவாசி உயர்வில் குடும்பங்களை நடத்த முடியவில்லை.
மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பங்களுக்கு நிவாரணம் உள்பட அரசு சலுகை எதுவுமே இந்த 15 ஆண்டுகளில் வழங்க வில்லை. இதனால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி விட்டது. காலமுறை சம்பளம் இனி வழங்கப்பட்டால் மட்டுமே எஞ்சிய காலத்தை நிம்மதியாக வாழ முடியும் என்ற சூழலில் தள்ளப்பட்டுள்ளோம். நிதி பற்றாக்குறை என சொல்லி நீதியை மறுக்க கூடாது. 3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் முதல்வருக்கு 300 கோடி ஒதுக்க மனம் இல்லையா?
15 ஆண்டாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தற்போதைய 12,500 ரூபாய் சம்பளத்தில் பரிதவித்து நிற்கின்றோம். எது எதுக்கோ நிதி ஒதுக்கும் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஒதுக்க வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை அரசாணையாக்க அமைச்சரவை கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் இதற்கு மனது வைக்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.