சென்னை: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த நகையை நேர்மையுடன் போலீஸாரிடம் ஒப்படைத்த பணியாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். காசிமேட்டைச் சேர்ந்தவர் கிளாரா (39). சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் (3-ம் தேதி) காலை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டப வளாகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. அதன் பிறகு மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது.
இந்த பணியில் கிளாரா ஈடுபட்டிருந்தார். அவர் அங்குள்ள கார் பார்க்கிங் பகுதியை சுத்தம் செய்தபோது, ஒரு பவுன் தங்கச் சங்கிலி கீழே கிடந்தது. அதை எடுத்து மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்தார். பின்னர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் நகையைத்தவறவிட்டவரை கண்டறிந்து அவரிடம் ஒப்படைத்தனர். தங்கம் விலை உச்சத்தில் உள்ள காலகட்டத்தில் ஏழ்மை நிலையிலும் நேர்மையாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் கிளாராவை பலரும் வெகுவாகப் பாராட்டினர்.
சமூக வலைதள பதிவு: இந்நிலையில், கிளாராவின் நேர்மையைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு போலீஸில் சகோதரி கிளாரா ஒப்படைத்த செய்தியைப் பார்த்து நெகிழ்ந்தேன். எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டாக மின்னும் தங்கை கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
புத்தாடை, வெகுமதி: இதுஒருபுறம் இருக்க, துப்புரவு பணியாளர் கிளாராவை குடும்பத்துடன் தனது முகாம் அலுவலகத்துக்கு அழைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிளாராவின் நேர்மையை பாராட்டினார். மேலும் அவருக்கு புத்தாடையும், தி.மு.க இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் வெகுமதியும் வழங்கி அவரது நேர்மையான பணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டும் அல்லாமல் துப்புரவு பணியாளர் கிளாராவின் குடும்பத்தினருடன் துணை முதல்வர் உரையாடினார்.
அப்போது, லண்டனில் இருந்து முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, பாராட்டு தெரிவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார் என்றும், தமிழகம் திரும்பியதும், உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், கிளாரா குடும்பத்தினரிடம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.