சென்னை: பணிநிரந்தம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 12 நாட்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதிநாளில் 3 ஆயிரம் பேர் பேரணியில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதி
நேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதி நேரஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் வெவ்வேறு விதமாக போராட்டங்களை முன்னெடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி 12-வது நாளான நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை சித்ரா தியேட்டர் முதல் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்தினர். பேரணி 12 மணிக்கு முடிந்த நிலையில் அவர்களை கலைந்து போக கூறி போலீஸார் அறிவுறுத்தினர். அப்போது ஆசிரியர்கள் பலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைதுசெய்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டனர். போராட்டத்தை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்பினர். மேலும், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 29 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘எங்களின் தொடர் போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளோம். நல்ல செய்தி வரும் என்று துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொள்கிறோம். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றனர். மறுபுறம் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை சற்று உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.