சென்னை: புகாரளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “காவல் ஆய்வாளர் முன்பு அமர புகார்தாரருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வெள்ளை சட்டையுடன் வந்தால்தான் சிவப்புக் கம்பள வரவேற்பு தருவீர்களா? அழுக்கு சட்டையுடன் வந்தால் புகாரை ஏற்கமாட்டீர்களா? அவர்கள் வாக்களித்தால் அந்த வாக்கை கணக்கில் கொள்ளமாட்டீர்களா? மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு, நீங்கள் சொல்பவர் தான் இருக்கையில் அமர வேண்டுமா? மற்றவர்கள் அமரக்கூடாது எனக் கூறுவதற்கு நீங்கள் யார்? அரசு அலுவலகம் அனைத்தும் மக்களுக்கானது,” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
அப்போது காவல்துறை தரப்பில் , “சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.