விழுப்புரம்: குடும்பத்துடன் தைலாபுரம் திட்டத்துக்கு அன்புமணி சென்ற நிலையில், புதுச்சேரி அருகே பட்டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்து்ளார்.
பாமக சட்ட விதிகளின்படி நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை பாமக தலைவர் அன்புமணி நடத்தி முடித்துவிட்டார். சென்னையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், தலைவர் பதவியில் அன்புமணி ஓராண்டுக்கு தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரி அடுத்த பட்டானூரில் ஆக. 17-ம் தேதி (இன்று) பாமக பொதுக்குழு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். ஏற்கெனவே நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ராமதாஸ் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது ராமதாஸும் உடனிருந்தார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூர் சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் பரப்பி வரும் வதந்தியை நம்ப வேண்டாம். பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள், தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.