விருதுநகர்: பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது? என்று மத்திய அரசிடம் உச்ச நீதின்றம் எழுப்பியுள்ள கேள்வியால் பட்டாசு உற்பத்தியார்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1,570 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101 ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும் உபதொழில்கள் மூலம் மறைமுகமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ம் தேதியிட்ட தீர்ப்பில், பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
மேலும், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, மத்திய அரசின் நீரி அமைப்பு மூலம் பசுமை பட்டாசுகளுக்கான தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அதை பின்பற்றி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வணிகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. அதோடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக பட்டாசுகளை அனுப்பும் பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பட்டாசுக்கான தடையை நீக்கக்கோரி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறுகையில், “பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாடு முழுவதும் இருக்க வேண்டும். வசதிபடைத்தவர்கள் வாழும் டெல்லிக்கு மட்டுமானதாக இருக்கக் கூடாது. சுத்தமான காற்றை சுவாசிக்க நாட்டின் பிற பகுதி மக்களுக்கு உரிமை இல்லையா? பட்டாசுகான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரும் மனுவுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
அதோடு, பட்டாசுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டால் இத்தொழிலை நம்பியுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே பட்டாசுக்கு தடை விதிக்காமல் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீனம்பட்டி சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், “பட்டாசு தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதோடு, பட்டாசு தொழிலுக்கான உபதொழில்களான அட்டைபெட்டி தயாரித்தல், அச்சகங்கள், லாரி சர்வீஸ், குழாய், கோன் தயாரிப்பாளர்கள், பட்டாசுக்கான மூலப்பொருள் தயாரிப்பாளர்கள், பட்டாசு மற்றும் மூலப்பொருள்கள் விற்பனையாளர்கள், பட்டாசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என நாடு முழுவதும் சுமார் 2 கோடி பேர் பட்டாசுத் தொழிலை நம்பி பிழைத்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும் தற்போது பட்டாசுத் தொழில் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையிலான பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிப்பதால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வதாரத்தை இழக்க நேரிடம்.
அதோடு, விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பட்டாசுக்கு தடை விதிக்காமல் மேலும் இத்தொழிலை விபத்து இல்லாமல் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து நடத்த திட்டங்களை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.