புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோருக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்து ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் கருப்பு அங்கியை அணிவது வழக்கம். ஆனால் சமீபத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பட்டமளிப்பு விழாக்களில் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியது. மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்துக்கு ஏற்ப உடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது.
ஆனால், ஜிப்மர் நிர்வாகம் பட்டம் பெறுவோருக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள மருத்துவர்களுக்காக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. அதில் பட்டமளிப்பு விழா ஆடையில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உடை அணியாதவர்கள் பட்டமளிப்பு விழாவில் அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான இந்திய பாரம்பரிய உடை என வெள்ளை நிற முழுக்கை சட்டையுடன் பைஜாமா அல்லது வெள்ளை நிற வேட்டி அணிந்து கறுப்பு அல்லது மெரூன் ஷூ அணிந்து வர வேண்டும் என புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இந்திய பாரம்பரிய உடை என தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலையுடன் தங்க நிற ஜாக்கெட் அணிய வேண்டும். அல்லது தங்க நிற பார்டர் உடன்
வெள்ளை நிற முழுக்கை சுடிதார் அல்லது சல்வார் காமீஸ் அணியலாம். சத்தம் எழுப்பாத சாண்டல்சை காலணியாக அணிந்து வர வேண்டும் என புகைப்படங்களுடன் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டம் பெறும் மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விசாரித்தபோது, “ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நாடு முழுதும் இருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு வெவ்வேறு பாரம்பரிய உடைகள் இருக்கலாம். ஆனால், உத்தரவில் குறிப்பிட்ட ஆடைகள் அனைத்தும் ஒரு மாநில பாரம்பரிய உடையை குறிப்பிடுவது போல் இருக்கிறது.
கருப்பு அங்கிகள் அணிவது என்பது காலனித்துவ காலத்தின் அடையாளம். அதைத் தவிர்க்க பாரம்பரிய உடைகள் அணிய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்தது. ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய உடைகள் அணிவதால், மாணவர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் ஒரு மாநிலத்தின் உடையை அணிய திணிக்கின்றனர்” என்று அதிருப்தியுடன் குறிப்பிடுகின்றனர்.