திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுகே உள்ள திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 1 கி.மீ., உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழை நீர் இந்த அருவியை அடைகிறது. பின்னர் தோணி ஆற்றின் வழியாக கோயிலை அடைந்து திருமூர்த்தி அணையை சென்று சேர்கிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடியிருந்தனர். அருவியிலும் ஏராளமானோர் குளித்தனர். அப்போது திருமுர்த்திமலை பகுதியில் மழைப்பொழிவு இல்லை. ஆனாலும் கோயில் நிர்வாகத்துக்கு கிடைத்த எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து கோயில் வளாகத்தில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள், வனத்துறை, போலீஸார், தீயணைப்புத் துறையினர் ஒன்று சேர்ந்து, அருவி, கோயில் வளாகத்தில் கூடியிருந்த அனைவரையும் வெளியேற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கோயில் வளாகத்தையும் சூழ்ந்தபடி வெள்ள நீர் சென்றது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருமூர்த்தி மலைக்கு மேல் நெடுந்தொலைவில் குருமலை, மேல்குரு மலை, குழிப்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. அங்கு மழை பெய்தால் பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இந்த தகவலை அங்குள்ள மலைவாழ் மக்கள் கோயில் நிர்வாகத்துக்கு தெரிவித்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
தொலை தொடர்பு இணைப்புகள் இல்லாத மலைக் கிராமத்தில் இருந்து தகவல் வழங்குவது எளிதான காரியம் இல்லை. அதற்காக அவர்கள் பல மைல் தொலைவு வரை கடும் மழையில் நடந்தும், கடந்தும் சென்றால் மட்டுமே நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும் இடத்தில் இருந்து தகவல் தெரிவிக்க முடியும். அல்லது நீண்ட தூரம் சென்று செல் போன் வைத்திருக்கும் வேறு நபரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தான் சமதளத்தில் உள்ள எங்களுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் உரிய நேரத்தில் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் நிகழப்போகும் அசம்பாவிதங்களை கற்பனையில் கூட எண்ண முடியாது. மலைவாழ் மக்களின் இந்த உதவி மனித நேயத்தின் வெளிப்பாடு. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று காலையில் அருவியில் அதிக நீர் வரத்து இருந்தது. அதனால் அருவிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் கோயில் வளாகத்தில் வெள்ள நீர் வராததால் வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்களும் தரிசனம் செய்தனர். இதற்கிடையே மதியம் மலைக் கிராம மக்களிடம் இருந்து மழைப் பொழிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக கோயில் வளாகம் பூட்டப்பட்டு, பூஜைகளும் நிறுத்தப்பட்டன. உடனடியாக பக்தர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்,’’ என்றனர்.