“கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் எங்களது உரிமை. இப்படி பேசுவதால், ‘நாங்கள் கூட்டணி மாறுவோம் ’என்று வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில், எங்கள் நண்பர்களிடம் எங்களது உரிமையை நாங்கள் கேட்கிறோம். முன்பு நாங்கள் 110 தொகுதிகளில் கூட போட்டியிட்டிருக்கிறோம்” என்று அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார்.
இந்நிலையில், வாக்குத் திருட்டு நடப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சின்னசேலத்தில் நேற்று முன்தினம் (அக்.4) கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்காக கே.எஸ்.அழகிரி மாலை 5 மணிக்கே வருவதாக கட்சியினர் தெரிவித்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டி பந்தலில் அமர வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி வந்த நேரம் இரவு மணி 7. காத்திருந்தவர்கள் வெறுத்துப்போய் இருக்கையை காலி செய்து விட்டு சென்று விட, உடன்பிறப்புகளின் நிர்வாகிகள் சிலர், “கூடுதல் தொகுதி கேக்குறது தப்பில்லை; ஆனால் கூடுன கூட்டத்தை தக்க வைக்க மாட்டேங்கிறாரே! பசிக்குதுன்னு கேக்குறாரே தவிர, பந்தியில உட்கார தாமதமா வர்றாரே!” என்று கலாய்த்தனர்.
அங்கிருந்த கதர் சட்டைக்காரர்களோ, “விஜய் வர லேட்டானா கூட்டம் கூடிக்கிட்டே போகுற மாதிரி, நமக்கும் கூடிக்கிட்டே போகும்னு நினைச்சிருப்பாரு!” என்று அவர்கள் பங்குக்கும் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.