அதிமுக ஆட்சியில் ‘பவர்’ ஃபுல் அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். தங்களின் கண்ணை உறுத்திக் கொண்டே இவரை வீழ்த்த, 2016-ல் எதிர்த்து நின்ற பழனியப்பனையே இவருக்கு எதிராக கடந்த முறையும் நிறுத்தியது திமுக. ஆனாலும், சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விராலிமலையை மூன்றாவது முறையாக தக்கவைத்துக் கொண்டார் விஜயபாஸ்கர்.
தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாலும் கடந்த தேர்தலில் பழனியப்பனின் களப்பணியால் மூச்சுத் திணறிப் போன விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்த முடியாமல் விராலிமலைக்குள்ளேயே முடங்கிப் போனார். அதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் தோற்றுப் போனது அதிமுக.
கடந்த காலம் இப்படி இருக்க, இம்முறையும் சொந்த மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தாமல் டெல்டாவிலும் திருச்சி மாவட்டத்துக்குள்ளும் தனது அதிகார எல்லையை விஸ்தரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் விஜயபாஸ்கர் என்ற ஆதங்கக் குரல்கள் அண்ணா திமுக-வுக்குள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார் சி.விஜயபாஸ்கர். அமைப்பு ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரிந்திருந்தாலும் ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக-வுக்கும் விஜயபாஸ்கர் தான் இப்போது ராஜா.
அண்மையில், மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்துக்காக இபிஎஸ் புதுக்கோட்டை வந்தபோது, புதுக்கோட்டை முழுக்க விஜயபாஸ்கரின் விளம்பரக் கொடி பறந்த நிலையில், டெல்டா மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு இபிஎஸ் சென்றபோதும் அங்கேயும் விஜயபாஸ்கரை வரவேற்று ஃபிளெக்ஸ்கள் தூள்பறந்தன.
இதையெல்லாம் சுட்டிக் காட்டும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், “பக்கத்து மாவட்டங்களிலும் அவர் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், சொந்த மாவட்டத்தை வலுவாக வைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்ய வேண்டும். கடந்த முறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலுமே விஜயபாஸ்கரால் பரிந்துரைக்கப்பட்டவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள். அவர்களுக்காக நாங்களும் தீயாய் வேலை செய்தோம்.
செயல்வீரர்கள் கூட்டங்களில் விஜயபாஸ்கரும் அடுக்கு மொழியில் பேசி, எங்களை எல்லாம் உற்சாகப்படுத்தினார். ஆனால், முன்னாள் அமைச்சர் நம்முடன் இருப்பதால் கவலை இல்லை என்ற தைரியத்தில் களத்தில் நின்ற வேட்பாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது சரிவர கிடைக்கவில்லை. அதேசமயம், விஜயபாஸ்கரும் தான் கரையேறுவதே கஷ்டம் என்றாகிப் போனதால் தேர்தல் நெருக்கத்தில் தனது விராலிமலை தொகுதிக்குள்ளேயே முடங்கிப் போனார்.
விராலிமலை தொகுதிக்குள் தனது மனைவி, மக்கள் என குடும்பத்தையே இறக்கிவிட்டு பிரச்சாரம் செய்தவர், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் பெயரளவுக்கு மட்டும் ஒருசில பகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு வந்ததோடு நிறுத்திக் கொண்டார். இதனால், உட்கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்புகளையும் உள்ளடி வேலைகளையும் உட்கார்ந்து பேசி சரிசெய்ய ஆளில்லாமல் போனது. மாவட்டத்தில் அதிமுக-வின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த முறையும் விஜயபாஸ்கருக்கு திமுக நெருக்கடி கொடுக்கும். அதேபோல் இம்முறையும் அவரால் அடையாளம் காட்டப்படுகிறவர்களுக்குத்தான் அதிமுக தலைமையும் சீட் கொடுக்கும். இதையெல்லாம் கணக்குப் போட்டு இப்போதே களப்பணியைத் தொடங்க வேண்டும். அதற்கு, பக்கத்து மாவட்டங்களில் தனது அரசியல் செல்வாக்கை காட்டுவதை குறைத்துக் கொண்டு சொந்த மாவட்டத்தில் விஜயபாஸ்கர் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்களை வைத்திருக்கும் திமுக, இம்முறையும் அதிமுக-வை ஒரு வழி பண்ணிவிடும்” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் தர்ம.தங்கவேலு, “தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் என்றெல்லாம் அண்ணன் விஜயபாஸ்கர் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத் கமிட்டியின் செயல்பாடுகளையும், அவற்றைக் கண்காணிக்க வேண்டியவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் ஆய்வு செய்து கொண்டே வருகிறார். யாராவது சரியில்லை என்றால் நேருக்கு நேராகவே ‘நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கண்ணே’ என்று சொல்லிவிடுவார்.
கடசி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கட்சியினர் வீட்டு நல்லது கெட்டதுகளில் விஜயபாஸ்கர் தவறாமல் பங்கெடுக்கிறார். எடப்பாடியார் இங்கு பிரச்சாரப் பயணம் வந்த போது மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் இருந்து ஆட்களை திரட்டினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் இவர் தான் பொறுப்பாளர் என்பதால் அங்கேயும் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. எதையும் வித்தியாசமாக யோசிக்கும் அண்ணன் விஜபாஸ்கர், சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய வியூகங்களை வகுத்து மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் களப்பணியாற்ற தயாராகி வருகிறார். அதனால், இம்முறை 6 தொகுதிகளையுமே அதிமுக கைப்பற்றும்” என்றார்.