சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இதை இதுவரை நிறைவேற்றாததால் போராடும் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது.
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் மூலம் வாக்குறுதி அளித்த திமுக அரசு, ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும்.
எனவே, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.