சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் மெரினா கடற்கரைக்கு வாரநாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதுவே வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.
குடும்பத்துடன் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டுகள், முதியோர் நடைபயிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்பர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு பேசி மகிழ உணவகங்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்வதால் மெரினாவுக்கு வர, சிறுவர்கள் முதல் முதியோர் வரை விரும்புகின்றனர்.
இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினாவில் மாலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதி வருகிறது. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மெரினாவுக்குள் நுழையும் கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்களும், கார்களும் நிரம்பி வழிகின்றன.
பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத படி வாகன நெருக்கடி இருந்து வருகிறது. மெரினா நீச்சல் குளம் முதல் நேதாஜி சிலைவரை உள்ள மெரினா கடற்கரை சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
அதை குறிப்பிடும் வகையில் ஆங்காங்கே ‘நோ’பார்க்கிங் அடையாளம் கொண்ட பலகைகளும் திருவல்லிக்கேணி போலீஸாரால் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் மெரினாவுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இந்த பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரைக்குள் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்துக்கு இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் சாலையை அடைத்து நிற்கின்றன. இவர்களை பின்தொடர்ந்து வரும் கார்களும், மற்ற இருசக்கர வாகனங்களும் சாலையை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பொதுமக்கள் சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. பார்க்கிங் கிடையாது என போலீஸாரால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும், அதைமீறி சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்வதால், நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பெரம்பூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கூறுகையில், “மெரினாவுக்கு அடிக்கடி குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் வர விருப்பம். அவ்வாறு வரும்போது எப்போதுமே மெரினா கடற்கரை சாலையில், மெரினா நீச்சல் குளத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு நீண்ட நேரமாகிறது. சாலையோரங்களில் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் அடைத்து நிற்பதால், பொதுமக்கள் சாலையில் நடுவில் நடந்து செல்கின்றனர்.
நேதாஜி சிலையை தொடர்ந்து இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் போது அதற்கு முன்பாகவே ‘நோ’ பார்க்கிங்கில் இவ்வாறு வாகனங்களை நிறுத்தி செல்வது அடுத்தடுத்து வரும் வாகன ஓட்டிகளை எரிச்சல் அடைய செய்கிறது.
வார இறுதியில் சிறிது நேரம் குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கவும், பொழுது போக்கி மனதை இலகுவாக்கி செல்லவும் வரும்போது, மெரினாவுக்கு நுழையும் போதே நீண்ட நேரம் காத்திருப்பது சோர்வடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ‘நோ’ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.