சென்னை: தமிழகத்தில் நேரடி போட்டித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க அரசுக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதி பெற்ற ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வின் மூலமாக 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் 50 சதவீத இடஒதுக்கீட்டின்படி நேரடி நியமனத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியரல்லா அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தி்ன்போது அமைச்சுப்பணி யாளர்களுக்கு வழங்க வேண்டிய 2 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்பிவிட்டு, அதன்பிறகு நேரடி நியமனங்களை நியமிக்கலாம் எனக்கூறி இடைக்காலத்தடை விதித்தார். தனி நீதிபதியின் இந்த தடையுத்தரவை எதிர்த்து நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஜெ.பிரபாகர் உள்ளிட்ட 77 பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மாதக் கணக்கில் காத்திருப்பு: இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன் கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீ்ட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் தாட்சாயிணி ரெட்டி, நளினி சிதம்பரம் ஆகியோர், ‘‘பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்காக 50 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று தேர்ச்சியாகியுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் தனி நீதிபதியின் உத்தரவால் பணி நியமனம் கிடைக்காமல் மாதக்கணக்கில் காத்து கிடக்கின் றனர்’’ என வாதிட்டனர்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.மைத்ரேயி சந்துரு ஆகியோர் ஆஜராகி, “அமைச்சுப்பணியாளர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டில் கடந்த 2007 முதல் 2014 வரை 220 பேர் நியமிக்கப்பட்டு விட்டனர். 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 2 சதவீத ஒதுக்கீட்டில் 151 பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது.
நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். தற்போது நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் தயாராக உள்ளன’’ என்றனர்.
அதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய நேரடி போட்டித்தேர்வுகள் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கும், 2 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்த மும் இல்லை, எனவே 50 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உரிய இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றி உடனடியாக பணி நியமனம் வழங்கலாம், என அனுமதியளித்து விசாரணையை 2 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்து 500 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கை யையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.