திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கடந்த 24-ம் தேதி வரையில் 22,735 மெ.டன் நெல்லினை 2,866 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இதுவரையில் ரூ.53.31 கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படவேண்டும்.
வியாபாரிகள் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகார் குறித்து மண்டல அலுவலக எண்-044-27664016 மற்றும் கைபேசி எண். 89252 79611ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.