சென்னை: நேபாள கலவரத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. பல்வேறு கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
காத்மாண்டுவில் உள்ள தி ஹயாத் நட்சத்திர விடுதிக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்து, அங்குள்ள பொருட்களை சூறையாடினர். இதற்கிடையே, நேபாளத்தில் நடைபெறும் தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான் அங்கு தங்கியிருந்த நிலையில், விடுதியில் சிக்கித் தவித்த 5 இந்தியர்களை காப்பாற்றியுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள், வீடியோக்கள் வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: காத்மாண்டு தி ஹயாத் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த மக்களை, ஆபத்பாந்தவனாக இருந்து காப்பாற்றி உள்ளார் செந்தில் தொண்டமான். கண்ணில் பட்டவர்களை எல்லாம் காப்பாற்றி கரைசேர்த்த பிறகும்கூட, இன்னும் யாரேனும் இருக்கிறார்களா என, உயிரை பணயம் வைத்து அவர் தேடிச் செல்லும் காட்சி, உணர்ச்சிவசப் பட வைக்கிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையில், தன்னலம் பாராது பலரது உயிரை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீரம், தன்னலமற்ற மனிதநேயம் பாராட்டத்தக்கது. அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: செந்தில் தொண்டமான் தனது உயிரை துச்சமென மதித்து, பல சுற்றுலா பயணிகளை காப்பாற்றியுள்ளார் என்ற மனிதநேய செய்தியை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது பணி அமைந்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி: விடுதியில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது மிகவும் ஆபத்தானது என தெரிந்தும், தமது உயிரை பற்றி கவலைப்படாமல் இந்தியர்களை காப்பாற்றி வெளிக்கொண்டு வந்த செந்தில் தொண்டமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: நேபாளத்தில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தால் ராணுவ கட்டுப்பாட்டையும் இழந்த நிலையில், அங்கு இருப்பவரும் நம்மில் ஒருவரே என்ற எண்ணத்தில் பொதுநலத்துடன் செயல்பட்ட செந்தில் தொண்ட மானுக்கு நன்றி, பாராட்டுகள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.