திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை நடைபெறவுள்ள பாஜக மண்டல பூத் கமிட்டி மாநாடு, அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர். அவருடைய தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.
சி .பி.ராதாகிருஷ்ணன் நேர்மையானவர். அவர் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவரை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழர்களுக்கு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசியிருக்கிறேன், கடிதமும் எழுதி இருக்கிறேன். தமிழ் பண்பாடு, தமிழர் கலாச்சாரம், தமிழர் மரபு, தமிழ், தமிழ் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை அவர் ஆதரிக்கவில்லை என்றால் அவர் பேசியது வெற்று வார்த்தையாகிவிடும்.
30 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டால் பதவி இழக்க நேரிடும் என்ற சட்டம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக அல்ல. அது ஆளுங்கட்சிக்கும் பொருந்தும். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என திருமாவளவன் கூறியிருக்கிறார். திமுக கூட்டணியில் அவர் சிக்கித் தவித்து வருவதை இது வெளிக்காட்டுகிறது. திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசியதன் வெளிப்பாடு இது.
திமுக தேர்தலின்போது அளித்த 285 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எஞ்சிய வாக்குறுதிகளிலும் உறுதி மட்டுமே அளித்திருக்கிறார்கள். 15 நாட்கள் தூய்மை பணியாளர்கள் வெயிலிலும் மழையிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் சொத்தை கேட்கவில்லை. பகுதி நேர வேலையை நிரந்தரமாக்கக் கோரி போராடி வருகிறார்கள். திமுக அரசு தூய்மை பணியாளர்களை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
ரஜினிகாந்த் சந்திப்பில் எந்தவித அரசியலும் கிடையாது. மாநிலத் தலைவரான பிறகு அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். விஜய் இப்போதுதான் கட்சியை ஆரம்பித்துள்ளார். அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் என்பது அவருடைய நம்பிக்கை. திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாடு அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும். இப்போதைய பாஜக பழைய பாஜக அல்ல, புதிய பாஜக” என்று தெரிவித்தார்.