திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் 32-வது பட்டமளிப்பு விழா வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் 104 உறுப்புக் கல்லூரிகளில் படித்த 37,376 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் ந.சந்திரசேகர் வரவேற்றார். இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் அ.பி.டிம்ரி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. பல்கலை.யில் நடைபெற்ற கடந்த 3 பட்டமளிப்பு விழாக்களிலும் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரை புறக்கணித்த மாணவி: பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெறாமல், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச் சான்றிதழை கொடுத்தார். அப்போது துணைவேந்தர் ‘ஆளுநரிடம் கொடுத்து பட்டம் வாங்குங்கள்’ என்று கூறினார். தனக்கு விருப்பமில்லை என்று மாணவி கூறினார்.
ஆளுநரும் ‘ஓகே’ என்று கூறியதையடுத்து,பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார். பின்னர் ஜீன் ஜோசப் கூறும்போது, “தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யாத ஆளுநரிடம் பட்டம் பெற எனக்கு விருப்பமில்லை” என்றார். இவரது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். ஆளுநரை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டம் பெற்றது சர்ச்சையை கிளப்பியது.