சென்னை: விவசாயிகளுக்கு சிரமமின்றி நெல் கொள்முதல் பணிகளை மேற்கொண்டு, அரவை ஆலைகள், சேமிப்பக் கிடங்குகளுக்கு அவற்றை விரைவாக, பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை நெல் மணிகளை பாதுகாக்க 4.03 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் கடந்த 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு சாதனையாக 47.99 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் 1.27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் கொள்முதல் 3.20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளதால், விவசாயிகளிடம் இருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதை விரைவாக, பாதுகாப்பாக சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்புவதை உறுதிசெய்யும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, டிஆர்பி. ராஜா, உணவுத் துறை செயலர் சத்யபிரத சாஹு, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.
மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை, கிடங்கு வசதி, உரங்கள் இருப்பு ஆகியவை குறித்து ஆட்சியர்களிடம் முதல்
வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அப்போது முதல்வர் பேசியதாவது: கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண் துறையின் கீழ் வரும், வேளாண் விற்பனைத் துறை சேமிப்புக் கிடங்குகள், வேளாண் உற்பத்தி துறையில் உள்ள ஒரு லட்சம் டன் கிடங்கு வசதி, வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவை ஆலைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் அலுவலர்களை அனுப்பி பணிகளை மேற்பார்வையிட வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் 2025-26-ம் ஆண்டில் அதிக அளவில் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து இடங்களிலும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பதையும், விவசாயிகளுக்கு சிரமம் தராமல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் இருந்து கூடுதல் ரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்ப வேண்டும்.
மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலை மேற்கொள்வதுடன், உரத் தேவையையும் நிறைவு செய்ய வேண்டும். நெல் சேமிப்பு, நகர்வை துரிதப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் அறி வுறுத்தியுள்ளார்.