திருநெல்வேலி: திருநெல்வேலியில் வரும் செப்.7-ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
வாக்குத் திருட்டு பற்றி விளக்க மாநில மாநாடு காங்கிரஸ் கட்சி சார்பில் திருநெல்வேலியில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டுத் திடலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை மக்களுக்கு திருப்பித் தருவோம் என்ற அடிப்படையில் பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
அதை ஒட்டி வாக்குத் திருட்டு குறித்து விளக்குவதற்காக மாநில அளவிலான மாநாடு திருநெல்வேலியில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு தமிழக அளவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் இந்த மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள். புதுடெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் தமிழக அளவில் காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
தமிழகத்தில் டிஜிபியை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் ராஜீவ் கிருஷ்ணா என்பவர் ஐந்தாவது முறையாக பொறுப்பு டிஜிபியாக உள்ளார். தமிழகத்துக்கான முதலீட்டை ஈர்க்கவும் புலம் பெயர் தமிழர்களை சந்திக்கவும் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
தமிழகத்தில் ராம ஜெயம், ஜெயக்குமார் மரண வழக்குகளில் இன்னும் துப்பு துவங்கப்படவில்லை. இந்த வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்றம் நடைபெறும் போது பிரதமர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு இருந்தார், அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இண்டியா கூட்டணி வலுவாகவும் இணக்கமாகவும் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து தேர்தல்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
சசிகாந்த் செந்தில் எம்.பியின் உடல் நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துள்ளோம். சென்னையில் காங்கிரஸ் இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு காங்கிரஸ் கட்சியை பற்றி பாஜக கூட்டணி தலைவர்கள் பேசியுள்ளனர்.
மூப்பனார் ஆன்மா பாஜகவை மன்னிக்குமா என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மூப்பனார் தனது வாழ்நாளில் பாஜகவை எப்போதுமே ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இணக்கமாக இல்லை. கூட்டணியில் முன்பு பாமக, தேமுதிக, ஓபிஎஸ் இருந்தனர். இப்போது அவர்கள் அதில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இண்டியா கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது” என்று செல்வப் பெருந்தகை கூறினார்.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் செல்வபெருந்தொகை பங்கேற்றார்.
முன்னதாக திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பூலித்தேவனின் பிறந்த நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு செல்வப் பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ராபர்ட் ப்ரூஸ் எம்.பி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ், தாரகை கத் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.