சென்னை: திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த நயினார் நாகேந்திரன், தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகளை மறைத்து ராபர்ட் புரூஸ் தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புரூஸ் தரப்பில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கி விட்டதாகவும், அதில் கலந்து கொள்வதால் பின்னர் வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன், சொத்து மற்றும் வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்குள் தள்ளி வைத்தார்.