திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

சுர்ஜித் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ளனர். எனவே இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று அதிகாரிகள் வன்கொடுமை பாதிப்பு முதற்கட்ட நிதியை கொண்டு சென்று கவினின் தந்தை சந்திரசேகரிடம் கொடுக்க சென்றபோது தனக்கு நிதி தேவையில்லை; நீதிதான் வேண்டும். பெண்ணின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி நிதியை வாங்காமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.
இதனை அடுத்து வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கவின் செல்போன் பாஸ்வேர்டை பெறவும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறை இறங்கியது. இதற்காக கவினின் சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு திருநெல்வேலிக்கு அழைத்து வந்தனர் மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஷ் முன்னிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கவின் மற்றும் அவர் காதலித்ததாக கூறப்படும் பெண் தொடர்பாக அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடலை வாங்க வலியுறுத்தி காவல்துறை சார்பில் ஆணையாளர் சந்தோஷ் துணை ஆணையர் பிரசன்ன குமார் ஆகியோர் வலியுறுத்தினர் ஆனால் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நபர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என அவர்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளனர் இதனால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவின் உறவினரும் வழக்கறிஞருமான செல்வம் கூறுகையில் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்யலாம் ஆனால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுக்கிறது அவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி அடக்கம் செய்வோம் இதே நிலை தொடர்ந்தால் இந்த வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர் வழக்கில் பாதிக்கப்பட்ட எங்களிடமே அதற்கான ஆதாரங்களை காவல்துறை கேட்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் காதி மணி உத்தரவிட்டுள்ளார்.