நெல்லை: திருநெல்வேலியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாநில பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தையும், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது: “தென்மாவட்டங்களிலுள்ள அனைத்து தரப்பு மக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த நூலகம் அமையும். இந்த நூலகத்தில் மினி திரையரங்கம், ஆடிட்டோரியம், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அறை போன்ற எண்ணற்ற வசதிகள் அமையவுள்ளது. நூலகத்துக்கான மாதிரி வரைப்படம் தயார் செய்யப்பட்டு தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறிய செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்திட பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.57 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 13 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இதில் ஆதிச்சநல்லூர் தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளம், சிவகளை கட்டிடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளம், கொற்கை தொகுதி ஏ மற்றும் பி கட்டிடம் 17,429 சதுர அடி தரைதளம், முதல் தளம் மற்றும் அறிமுக காட்சி கட்டிடம், கைவினை பொருட்கள் பணிமனை, ஒப்பனை அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், ஒவ்வொரு கட்டிடத்துக்கும் இணைப்புச் சாலை, அழகுநிறைந்த குளம், குளத்தின் மீது பாலம், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயதானவர்கள் சென்று பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்துதரப்படவுள்ளது. இந்த பணிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுபெற்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மேற்கு புறவழிச்சாலை 33 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக 12.09 கி.மீ புறவழிச்சாலைக்கு ரூ.180 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, கொங்கந்தான்பாறை விலக்கிலிருந்து சுத்தமல்லி வரைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2-வது கட்டமாக சுத்தமல்லி முதல் ராமையன்பட்டி வரை நிலமெடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிக்கு ரூ.225.47 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வரிடம் ஒப்புதல் பெற்று நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் விரைந்து பணிகள் நடைபெறும்.
குலவணிகர்புரம் ரயில்வேகிராசிங் இடத்தில் ஒய் வடிவில் பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ரூ.93 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிலஎடுப்பு பணி முடிவடைந்தவுடன் இப்பணிகள் தொடங்கப்படும்.
நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சாலை விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று அவர் கூறினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், மு. அப்துல்வகாப் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.