திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ஹைகிரவுண்டிலுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனை, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு சிவப்பு வண்ணத்திலான தாழ்தள அரசுப் பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன.
இப்பேருந்துகளில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங் கோட்டை பேருந்து நிலையத்துக்கு ரூ.11-ம், சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த பேருந்துகள் மகளிர் இலவச விடியல் பேருந்துகளாக, இளம் நீலவண்ணத்தில் மாற்றி தற்போது இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளை ஹைகிரவுண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாப் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிர் விடியல் பயண தாழ்தள அரசுப் பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு கட்டணம் ரூ.11-ல் இருந்து ரூ.7 ஆகவும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.9 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலர் ஆர். ராதா கிருஷ்ணனிடம் கேட்டபோது, ”சாதாரண கட்டண பேருந்துகளையே மகளிர் விடியல் பயண பேருந்துகளாக இயக்க முடியும். அந்த வகையில் சிவப்பு வண்ணத்திலான தாழ்தாள பேருந்துகளை மாற்றிவிட்டு தற்போது மகளிர் விடியல் பயண பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 70 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படும்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரையில் மொத்த வருவாய் ரூ.13,035.06 கோடியாகும். மொத்த செலவு ரூ.19,263.36 கோடியாகும். இதனால் நஷ்டம் மட்டும் ரூ.62,28.79 கோடி.. கடந்த 11 மாதங்களில் மட்டும் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டண குறைப்புடன் மகளிர் விடியல் பயண பேருந்துகளை இயக்குவதால் மேலும் நஷ்டம் தான் ஏற்படும் என்று தெரிவித்தார்.