சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக 2024-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதே ஆண்டு நவம்பர் மாதம் டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின்படி கோயில் நிலத்தில், அன்னதான கூடம் கட்ட முடியுமே தவிர, வணிக வளாகம் கட்ட முடியாது. வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபங்கள் எதுவும் கேட்கப்படவில்லை.
கோயிலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டியுள்ளன. சிதிலமடைந்துள்ள பல கோயில்களை சீரமைக்க வேண்டியுள்ளது. இவற்றின் மீது கவனம் செலுத்தாமல் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாகவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கோயில் நிலத்தில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்க வேண்டும். வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகன்நாத், “கோயில் உபரி நிதியை வணிக வளாகம் கட்ட, சட்ட விதிகள் அனுமதிக்கவில்லை என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை உறுதி செய்துள்ளது. நெல்லையப்பர் கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டார். அறநிலையத் துறை தரப்பில், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல, சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு என்ற பெயரில், கோயில் நிலத்தில், கோயில் நிதி ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தி திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாக கட்டிடங்கள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இப்பணிகளிலும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணை ஜூலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.