நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. தேரோட்டத்தின் போது சாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான இன்று காலையில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில், 63 நாயன்மார்களுடன் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தேர்களை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுவாமி, அம்பாள் தேர்களுக்கு சாரம் கட்டுதல், முகப்பில் மரக்குதிரை பொம்மைகளை பொருத்துதல், அலங்கார வேலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும், ரத வீதிகளிலும், சுவாமி, அம்பாள் சந்நிதி, ராஜகோபுரம் நுழை வாயில்களிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாரும் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தேரோட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்னகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேரோட்டத்தின்போது 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் தொடக்கம் முதல் இறுதி வரை வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படும். தேரோட்டம் நடைபெறும் நாளில் 4 ரத வீதிகளிலும் வாகனங்களை நிறுத்தவோ, இயக்கவோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படும்.
தேரோட்டத்தின்போது சாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவது, ரிப்பன்களை கட்டிவருவது, பதாகைகளை வைப்பது, கோஷங்களை எழுப்புவது, தேரின் மீது சாதி ரீதியிலான கொடிகளை பறக்கவிடுவது போன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதியில்லை. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்வதற்கு ஏதுவாக ‘மே ஐ ஹெல்ப் யூ’ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தொலைபேசி எண்கள் மூலம் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர தேவைக்கும், பொதுமக்கள் 24 மணி நேரமும் 94981 01726 மற்றும் 100 (காவல் உதவி எண்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று துணை ஆணையர் பிரசன்னகுமார் கூறியுள்ளார்.