சென்னை: சென்னையில் 4 வழிச்சாலையாக உள்ள மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அதை 6 வழிச்சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு வரிசையாக அமைந்துள்ள 9 சிலைகளை இடமாற்றம் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் முதல் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ள காமராஜர் சாலை எனப்படும் மெரினா கடற்கரை சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருவதால் இங்கு கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற உலகத் தரம் வாய்ந்த வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 4 வழிச்சாலையாக உள்ள இச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி போக்குவரத்தை குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில், 23 மீ அகலமுள்ள 2.8 கிமீ நீள சாலை, 29 மீ அகலமாக விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்மூலம் மெரினா கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றியமைக்கப்படும். அதேநேரம் இச்சாலையொட்டி அமைந்துள்ள நடைபாதையில் வரிசையாக உள்ள 9 சிலைகளை இடமாற்றம் செய்யவும் மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் எம்ஆர்டிஎஸ் இணைப்பு தெருவை விரிவுபடுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்துடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள மணி முகத்துவாரமும், காமராஜர் சாலையுடன் வி.பி.ராமன் சாலை இணையும் பகுதியும் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் பகுதி வரையில் சாலையை அகலப்படுத்தும் பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.