வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, கண்டிகை சந்திப்பில் ‘சிக்னல்’ அமைக்க வேண்டும் மற்றும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் – கேளம்பாக்கம் இடையிலான, 20 கி.மீ., துாரமுள்ள சாலையில் இரு பக்கமும், 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 40-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள், 30-க்கும் மேற்பட்ட அரசு தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன. தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்வோர், இந்த சாலையில் தான் பயணிக்கின்றனர்.
இது தவிர, திருப்போரூர் முருகன் கோயில், கோவளம், மாமல்லபுரம், ஈசிஆர் செல்வோர் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருவதால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகிறது. இதே வழித்தடத்தில் நெல்லிக்குப்பம் சாலையில், 80-க்கும் மேற்பட்ட கல் அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு நாளொன்றுக்கு, 300-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் ஜிஎஸ்டி சாலைக்கு நிகராக இந்த சாலையில் வாகன போக்குவரத்து உள்ளது.
இந்த வழித்தடத்தில் கண்டிகை சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பில் திரும்பும் வாகனங்கள் சாலையை கடக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக செல்ல, இங்கு ‘சிக்னல்’ இல்லை. இது மட்டுமின்றி இந்த சந்திப்பின் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த கண்டிகை சந்திப்பு உள்ளது.
இந்த சந்திப்பில், ‘சிக்னல்’ அமைக்காததோடு போக்குவரத்து போலீஸாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் இந்த சந்திப்பு ஸ்தம்பித்து விடுகிறது.
யார் வழிவிடுவது என்பதில் வாகன ஓட்டிகள் இடையே நடக்கும் போட்டியால் அரை மணி நேரத்துக்கு மேல் வாகனங்கள் நகராமல் நிற்கும் நிலை உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மற்றும், அவசரமாக செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போக்குவரத்து போலீஸாரை நியமிப்பதுடன், சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ராகேஷ் கூறியதாவது: வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், அகரம்தென், சேலையூர், பொன்மார், மேலக்கோட்டையூர், முருகமங்கலம், கீரப்பாக்கம், நெல்லிகுப்பம் வழியாக இதர பகுதிக்கு செல்வோர் இந்த சந்திப்பில் திரும்பி பயணிக்கின்றனர். இங்கு சிக்னல் இல்லாததால் பிரதான சாலையில் நேராக செல்லும் வாகனங்களும் சந்திப்பில் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
குறிப்பாக ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் யார் முந்திச் செல்வது, யார் வழிவிடுவது என வாகன ஓட்டிகள் இடையே போட்டி எழுந்து, பல நேரங்களில் வாக்குவாதமும், கைகலப்பும் நிகழ்கிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
கவனக்குறைவாக செயல்பட்டால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சந்திப்பில் ‘சிக்னல்’ அமைப்பது மிக அவசியம். இல்லாவிட்டால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.