சென்னை: நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து சென்னையில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கடற்கரைகளில் அமல்படுத்தப்படும் நீலக்கொடி கடற்கரை, கடல் மேம்பாலம், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்களை எதிர்த்து தென்சென்னை அனைத்து மீனவ கிராம சபை சார்பாக மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது. சபையின் ஒருங்கிணைப்பாளர் என்.ரத்தினவேல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீலக்கொடி திட்டம் வந்தால் கடற்கரையில் இருக்கக்கூடிய மீனவர்களின் கட்டுமரங்கள், வலைகள், ஃபைபர் படகுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இத்திட்டம் உலக நாடுகளுக்கு பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்தாது. ஏனென்றால் இங்கு கரைதொழில் செய்யக்கூடிய மீனவ சமூகங்கள் நிறைய உள்ளன. மீன் பிடித்தொழில் நடைபெறும் இடத்தில் நிச்சயமாக மீன் வாடை வரும்.
ஆனால் ஒரு வெளிநாட்டவர் நம் கடற்கரைக்கு வந்தால் மீன் வாடை வருகிறது என்ற புகார் நிச்சயம் அளிப்பார். அந்த புகாருக்கு எடுக்கப்படும் முதல் நடவடிக்கையாக, எங்களை (மீனவர்களை) அப்பகுதியில் இருந்து அரசு காலிசெய்யும். இது நீலக்கொடி திட்டத்தில் இருக்கும் பேராபத்து ஆகும்.
இதனால் பாரம்பரியமிக்க மீனவ மக்களின் கடற்கரை பறிக்கப்படும். அதேபோல் கடல்வழி மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியிருக்கிறது. இந்த கடல் மேம்பாலம் வந்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதே கடினமானதாக இருக்கும். விபத்துக்கள் ஏற்பட நேரிடும்.
இதற்கிடையே மத்திய, மாநில அரசு இணைந்து 80 கிமீ தூரம் கொண்ட கடல்வழி எரிவாயு திட்டத்தை ஹரிகோட்டாவில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையம் இருக்கும் புதுபட்டினம் கடற்கரை பகுதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்றவற்றை எடுப்பதற்காக முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனால் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும். இந்த திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.