ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் குன்னூரில் வீடு மீது மரம் விழுந்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அவ்வப்போது கடும் மேகமூட்டத்துடன் காற்றும் வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி வனத்துறை கட்டுபாட்டில் உள்ள பைன் ஃபாரஸ்ட் மற்றும் 8-வது மைல் ட்ரீ பார்க் ஆகிய இரண்டு சூழல் சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக இன்று மூடப்பட்டன. அதே போல அவலாஞ்சி சுற்றுலா தலமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் மழையின் காரணமாக ராட்சத கற்பூர மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமானது. அருகில் இருந்த கார் லேசாக சேதமடைந்தது. இதனால் இந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி நடைபாதையை சீரமைத்தனர். இருந்தபோதிலும் அந்தப் பகுதியில் அபாயகரமாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பார்சன்ஸ் வேலியில் 35 மி.மீ., மழை பதிவானது. நடுவட்டம் 23, கிளன்மார்கன் 22, அவலாஞ்சி 20, போர்த்திமந்து 18, ஓவேலி 18, செருமுள்ளி 10, பாடந்தொரை 10, கூடலூர் 8, தேவாலா 7, அப்பர் பவானி 7, ஊட்டி 6.6, சேரங்கோடு 6, கல்லட்டி 4, பந்தலூர் 4, எமரால்டு 3, கோத்தகிரி 3, கோடநாடு 3, கேத்தி 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.