ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. கூடலூரில் 140 மி.மீட்டர் மழை பதிவானது. ஊட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கோயில் சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக ஊட்டி நகரில் உள்ள வண்டி சோலை பகுதியில் இருந்த நூற்றாண்டு பழமையான ராட்சத மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கிருந்த சங்கிலி முனீஸ்வரர் கோயில் இடிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராட்சத மரத்தை 2 மணி நேரத்திற்கு மேலாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் விழுந்த போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் விழுந்ததில் மாட்டு கொட்டகை சேதமடைந்த நிலையில் கொட்டகையில் இருந்த மாடுகள் தப்பின. கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.
சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோத்தர் வயல் பகுதியில் வயல்கள் மற்றும் வாழை தோட்டங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால், மாணவர்கள் மழையில் நனைந்த படியே பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிக பட்சமாக கூடலூரில் 140 மி.மீ., மழை பதிவானது. மேல் கூடலூரில் 136, தேவாலா 94, சேரங்கோடு 80, பார்சன்ஸ் வேலி 74, அவலாஞ்சி 73, ஓவேலி 71, நடுவட்டம் 70, பந்தலூர் 62, கிளன்மார்கன் 66, செருமுள்ளி 45, பாடந்துறை 40, போத்திமந்து 42 மி.மீட்டர் மழை பதிவானது.ஊட்டி வண்டிசோலை சங்கிலி முனீஸ்வரன் கோயில் மீது விழுந்த நூற்றாண்டு பழமையான மரம். (அடுத்த படம்) கூடலூர் கோத்தர் வயல் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்.