சேலம்: காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 3,352 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.60 அடியாக உயர்ந்துள்ளது.
தென் மேற்குப் பருவமழை தொடங்கி விட்ட நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நாட்களில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கடந்த 31-ம் தேதி அன்று விநாடிக்கு 2,913 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,017 கனஅடியாக அதிகரித்தது. இன்று விநாடிக்கு 3,352 கனஅடியாக மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களின் நீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் நீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
எனினும், 110 அடிக்கு மேல் நீர் தேங்கியுள்ளதால், அணையின் நீர் தேங்கும் பரப்பு அதிகரித்து, நீர் மட்டத்தின் அளவு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 112.48 அடியாக இருந்த நிலையில், இன்று 112.60 அடியாக உயர்ந்தது. இதேபோல் அணையின் நீர் இருப்பு 81.15 டிஎம்சி-யில் இருந்து இன்று 81.98 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது.