தருமபுரி / மேட்டூர்: நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பும் விநாடிக்கு 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,828 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 16,493 கன அடியாகவும், மாலையில் 29,360 கனஅடியாகவும் அதிகரித்தது.
அணையிலிருந்து நீர்மின் நிலையம் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியிலிருந்து நேற்று மதியம் 20,000 கனஅடியாகவும், இரவு 22,500 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 118.86 அடியாகவும், நீர் இருப்பு 91.66 டிஎம்சியாகவும் இருந்தது.