காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்று பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து போராட்டக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 1,100 நாட்களை நோக்கி போராடி வருகின்றோம். இந்தப் போராட்டம் என்பது இந்த திட்டத்தால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் என அனைவரது ஆதரவைப் பெற்று போராடி வருகிறது. சட்டப் போராட்டம் நடத்துவதற்கான உகந்த சூழல், சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கருதி நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் தொடராமல் தற்போது வரை காத்திருக்கிறோம்.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சமூக ஆர்வலர் ஒருவர் இந்த விமான நிலையம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. எங்களுக்கும் அந்த வழக்குக்கும் தொடர்பில்லை. எங்கள் போராட்டமும், அடுத்த நாங்கள் எடுக்க இருக்கும் சட்டப் போராட்டமும் தொடரும்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.