சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞரான வாஞ்சிநாதன், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடக் கோரி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் முன்னாள் நீதிபதிகள் தலையீடு செய்யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், “நீதித்துறை சார்ந்த விவகாரங்களில் மனுதாரருக்கு என்ன சம்பந்தம் உள்ளது? இதுபோன்ற விஷயங்களில் மனுதாரர் தலையிடக் கூடாது” என்று எச்சரித்தனர். பின்னர், சுயவிளம்பரத்துக்காக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி, மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.