சென்னை: கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எவரும் எதிர்பாராத இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த செப். 14 முதல் மாவட்ட வாரியான பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரைக் காண ரசிகர்கள், தொண்டர்கள் மிக அதிக அளவில் திரண்டதால், அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறைக்கு சவாலாக இருந்தது. மேலும், பல இடங்களிலும் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன.
அதேபோல, தொண்டர்கள், ரசிகர்கள் சிலர் உயரமான இடங்களிலும், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மரங்களிலும் ஆபத்தான முறையில் நிற்பது, விஜய் பிரச்சார வாகனத்தை பைக்குகளில் பின்தொடர்வது என ஆபத்தை உணராமல் செயல்பட்டனர். இதனால் தவெக பிரச்சாரங்களுக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதை எதிர்த்து தவெக துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் கடந்த செப். 18-ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘‘இதுபோன்ற கூட்டங்களின்போது போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பொது சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன. சாலைகள் முழுமையாக முடக்கப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டியது போலீஸாரின் கடமை. இதுபோன்ற ஆபத்தான இடங்களில் ஏறி நிற்கும்போது அசம்பாவிதம் நேரிட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? நீங்கள்தான் கூட்டத்தையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த வேண்டும். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும்’’என்று எச்சரித்தார்.
மேலும், “இதுபோன்ற கூட்டங்கள், பேரணிகளுக்கு கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டுமென, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே? மேலும், தனது தொண்டர்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தவும் வேண்டும்’’ என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
அதேபோல, ‘‘அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் மாநாடுகள், கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வரவேண்டும். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
அரசியல் கட்சியினருக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது. பொது சொத்துகள் அல்லது மக்களின் தனிப்பட்ட உடமைகள் சேதப்படுத்தப்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப். 19-ம் தேதி அறிக்கை வெளியிட்டார்.
உயர் நீதிமன்றம் மற்றும் கட்சித் தரப்பில் அறிவுறுத்தியும், கரூரில் தவெக நடத்திய பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் ஏராளமானோர் பங்கேற்றனர். எதிர்பாராத வகையில் நடந்த விபத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ‘ரோடு ஷோ’ போன்ற பிரச்சாரங்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது.
அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள் மூலமாக மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். சாமானியர்களின் உயிரைப் பணயம் வைக்கும் விஷப் பரிட்சையை மீண்டும் முயற்சிக்க வேண்டாம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.