சென்னை: தெலங்கானாவில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலில் வந்துள்ள நீதிபதி டி.வினோத்குமாருக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த டி.வினோத்குமாரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதையேற்று அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி நீதிபதி டி.வினோத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதியான டி.வினோத்குமாரை அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வரவேற்றுப் பேசுகையி்ல், ‘‘நீதிபதி வினோத்குமாரின் சொந்த ஊர் தெலங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சூரிய பேட்டை. இந்த ஊரில் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன. சுத்தமான நகராட்சி என பெயர் எடுத்த ஊரும் கூட. அத்தகைய பெருமை மிகு ஊரில் இருந்து சென்னைக்கு வந்துள்ள நீதிபதி வினோத்குமாரை வரவேற்கிறோம். கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றுள்ள அவர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சிறப்பாக பணியாற்ற வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவர்” என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் எம்.பாஸ்கர், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரேவதி, லா அசோசியேஷன் தலைவர் செல்வராஜ் ஆகியோரும் வரவேற்றுப் பேசினர்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நீதிபதி டி.வினோத்குமார் பேசும்போது, ‘‘ பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
நீதிபதி வினோத்குமார் பதவியேற்றதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.காலியிடங்களின் எண்ணிக்கை 19-ஆக குறைந்துள்ளது.