சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 6) இயற்கை எய்தினார்.
நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னார் நீதி துறைக்கும், மாநிலத்துக்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.